Monday, February 6, 2012

பத்தும் பறந்து போம்


தானே புயல் தாண்டவமாடிய நாள் அன்று மாலை...
இருந்த ஒரே மெழுகுவர்த்தியும் சிறிதாகி விட.. புதிது வேண்டும் என்று மனைவி கேட்க... நானும் என் மகளும் அடர்ந்து கொண்டு வரும் இருட்டின் ஊடே கடைத் தெருவின் பக்கம் சென்றோம்.
முதல் நாள் வரை நேர்த்தியாக, அழகாக இருந்த தெரு... அலங்கோலமாக.
உயரத்தில் சிரித்த விளம்பர போர்டுகள், நியான் விளக்குகள் சுக்கல் சுக்கலாய் எங்கும் சிதறி கிடக்க... ஒற்றையடி பாதையாக தெரு, விடாமல் அழுமூஞ்சியாய் சிணுசிணுத்த மழையில் நனைந்தபடி....

திறந்துகிடந்த ஓரே கடையிலும், என்னைப் போல்  மெழுகுவர்த்தி வாங்க, தீப்பெட்டி, பிரட், ஜாம், டார்ச் லைட், என அவசியம் தேவைபடும் பொருள்களுக்காக மோய்த்தபடி கூட்டம்.

நான் குடையை பிடித்தபடி ஒரமாய் நின்று கொள்ள, என் மகள் கடைக்குள் சென்றாள்.

எங்கிருந்தோ... என் பக்கத்தில் வந்து நின்ற இளைஞனுக்கு வயது 22 – 23 இருக்கும். விலையுயர்ந்த ‘லெதர் ஜெர்கின், மூக்கின் மேல் ‘ரிம் லெஸ் கண்ணாடி, காலில் உயர் ரக ஷீ என வார இறுதி நாட்களை கழிக்க வந்த IT இளைஞன் தோற்றம்.  முகத்தில் பணகாரத்தனம் + 2 நாள் தாடி.  ஒருவித மிரட்சியுடன் கடையின் உள்ளே கண்களை சுழற்றியவன் விடுவிடுவென கண்ணாடி ஷெல்பின் அருகே சென்று அதை தள்ளி திறந்தான்.  கடையின் கவுண்டரில் இருந்தவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இரண்டு ‘கேக் பாக்கெட்களை எடுத்து, ஒன்றை பிரித்து ஆவலுடன் சாப்பிட ஆரம்பித்தான்.

கடைக்காரர், “அலோ! என்னங்க இது? வந்தீங்க நீங்களா எடுத்து சாப்டுட்டிருக்கீங்க? என லேசாய் எரிச்சலுடன் கேட்டார்.  ஒரு கையால் கேக்கை வாயில் போட்டுக் கொண்டே ‘பொறுங்க என்பது போல் சைகை செய்த அவன் பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டு கனமான பர்சை எடுத்து காட்டி, “காசு நிறைய இருக்கிறது.. நேத்து நைட்ல இருந்து கொல பட்டினி.... பசி தாங்கல... அதான் என்றான் பரிதாபமாக.

“பணம் பத்தும் செய்யும் ......... பசி வந்தால் அந்த பத்தும் பறந்து போம்